web log free
December 21, 2024

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விஷம் கொடுத்து கொன்ற கொடூரன்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 14-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோர் வழக்குப்பதிவு செய்யாமல் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளனர்.

அதன்படி போலீசார் மனு ரசீது மட்டும் கொடுத்து விட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதின்பேரில் மேலூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுல்தான் மகன் நாகூர்அனிபா என்ற வாலிபருக்கும் காதல் இருந்தது தெரியவந்தது.

எனவே அவர்தான் சிறுமியை அழைத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நாகூர்அனிபாவின் தாயார் மதினாபேகம் கடந்த 3-ந்தேதி சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டு சென்றார்.

வீட்டிற்கு வந்த சிறுமி சோர்வாக காணப்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் சிறுமியை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை சீராகவில்லை.

இதனால் டாக்டர்கள் ஆலோசனைபடி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்ற விவரம் தெரியாததால் சிகிச்சையில் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. எனவே நாகூர் அனிபாவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

ஆனால் அவர் தலைமறைவாக இருந்ததால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மதுரை, சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் வைத்து நாகூர் அனிபா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

கடந்த 14-ந்தேதி திருமண ஆசை காட்டி சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு நாகூர் அனிபா அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராகிம் வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையில் சிறுமி மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் நாகூர் அனிபா பயந்துபோனார். இதனால் வி‌ஷம் (எலி பேஸ்ட்) வாங்கிய நாகூர் அனிபா அதை சிறுமிக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் அதனை துப்பி விட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறாமல் சிறுமியை கொண்டு வந்து தனது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது வீட்டில் விட்டு விடுங்கள் என நாகூர் அனிபா கூறி சென்றுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாகூர் அனிபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை திருநகர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் கிருஷ்ணன், ராஜா முகமது, திருப்பூர் சாகுல் அமீது, நாகூர் அனிபா தாயார் மதினா பேகம், உறவினர்கள் ரம்ஜான்பேகம் என்ற கண்ணம்மாள், ராஜா முகமது ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் நாகூர் அனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு எலி மருந்து கொடுக்கப்பட்ட விவரம் தெரியவந்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

என்றாலும் அந்த சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு மயக்கம் தெளிந்தால் தான் அவர் திருப்பூர் கடத்தி செல்லப்பட்டு எத்தகைய பாலியல் கொடூரத்துக்கு ஆளானார் என்பது தெரிய வரும் என்று போலீசார் கருதினார்கள்.

அந்த சிறுமி திருப்பூரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆனால் போலீஸ் தரப்பில் இந்த புகார் மறுக்கப்பட்டது. எனவே சிறுமி மயக்கம் தெளிந்தால் தான் உண்மை நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த சிறுமி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதனால் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் உண்மை தெரியாமலேயே புதைந்து போனது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd