இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ். விவசாயியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்து வந்தார்.
அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் கூட்டத்தொடரின் போது தனது செல்போனில் 2 முறை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் பாராளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம் கூட்டத்தொடரின்போது தான் ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நீல் பாரிசை கட்சியில் இருந்து நீக்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்தது. தன்மீதான விசாரணை முடியும் வரை எம்.பி. பதவியில் தொடர்வேன் என நீல் பாரிஷ் கூறினார். ஆனால் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “இறுதியில், எனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோர் என்னால் கோபமடைந்திருப்பதையும் காயமடைந்திருப்பதையும் காண முடிந்தது. பதவியில் தொடரத் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்தேன்” என்றார்.
65 வயதான நீல் பாரிஷ் பாராளுமன்றத்தில் தான் ஆபாச படம் பார்த்தது குறித்து விளக்குகையில், “ஒரு இணையதளத்தில் டிராக்டர்கள் குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக தடை செய்யப்பட்ட ஆபாச படத்தை பார்க்க நேர்ந்தது. அதை பார்க்க கூடாதுதான். ஆனால் அந்த நேரத்தில் நான் சற்று தடுமாறி, சிறிது நேரம் அதை பார்த்தேன்” என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஆனால் எனது குற்றம், மிகப் பெரிய குற்றம் என்னவென்றால், மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் 2-வது முறையாக அதை பார்த்தேன். அதை வேண்டுமென்றே செய்தேன். அறையின் ஓரத்தில் வாக்களிக்கக் காத்து கொண்டிந்தபோது மீண்டும் ஆபாச படத்தை பார்த்தேன்” என்றார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் “அந்த தருணத்தில் உங்களுக்கு என்ன தோன்றியது?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நீல் பாரிஷ் , “அது ஒரு பைத்தியக்கார தருணம். அந்த தருணத்தில் என்னை நான் பித்து பிடித்தவனாய் உணர்ந்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை கவனிப்பார்கள் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. நான் செய்ததை நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலும், முற்றிலும் தவறு. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.