web log free
April 25, 2024

பதவி விலகிய சூடான் இராணுவ ஆட்சி தலைவர்

சூடானில் மக்களாட்சி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டின் இராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் கடந்த 1993ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் உமர் அல் பஷீர் என்பவர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், அங்கு இடம்பெற்ற உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு உமர் அல் பஷீருக்கு எதிராக சர்வதேச நீதமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியதுடன், அங்கு போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில், இராணுவதுறை அமைச்சராக இருந்து வந்த அவாத் இப்ன் ஆப், கடந்த 11ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார்.

அத்துடன் 2 ஆண்டுகள் இராணுவ ஆட்சி தொடரும், அதன்பின்னர்தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும், இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பெருமளவில் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, இராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் ஆப் பதவி விலகியதுடன், இராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் கூறியுள்ளார்.

எனினும், இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், சூடானில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.