முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார். உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகைஇன்று (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
அதன்படி, பயனாளிகள் தங்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை இன்று முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக சமீபத்திய நாட்களில் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை, மேலும் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலையில் சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று, நிகழ்வை செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மொனராகலை, மகந்தன முல்ல வீதியில் உள்ள தனியார் விடுமுறை விடுதியில், சமகி ஜன பலவேகயவின் மொனராகலை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் தொடர்புடைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. எச். எம். தர்மசேன, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கட்சியின் மொனராகலை மாவட்ட அரசியல் அதிகாரசபையின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இந்தக் கூட்டம் கட்சியின் உள் விவகாரம் என்று கூறி வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.
இதன்படி, 2024ஆம் ஆண்டில் அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத கொலைகளை புரிந்தமை தொடர்பான பல அறிக்கைகள் வெளியானதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் துன்னான பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை, மேலும் ஹங்வெல்ல பொலிஸ் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இன்று (14) சிறப்பு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதற்காக இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க 071 - 8598888 என்ற புதிய வாட்ஸ் அப் இலக்கத்தை இலங்கை பொலிஸ் மா அதிபர் வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய புதன்கிழமை (13) அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஊடாக குறுஞ்செய்திகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக ஐ.ஜி.பிக்கு அனுப்ப முடியும்.
இந்த இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதைகுழியின் மண் மாதிரிகள் தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த நிலையில், நாளைய வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இதுவரை 147 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 133 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாம்கட்ட அகழ்வுப்பணிகளின் இரண்டாம்கட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருந்தன. இரண்டாம்கட்ட அகழ்வுப்பணிகளின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளது. செம்மணிப் புதைகுழியின் மண்மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் நீதிமன்றத்தால் கோரப்பட்ட நிலையில், நாளைய வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த அகழ்வுப்பணிகளின்போது தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் ஸ்கான் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. அந்த அறிக்கையும் சிலவேளைகளில் நாளை சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.
அரசாங்க சேவையில் புதிதாக 62,314 பேரை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுபற்றிக் குறிப்பிட்ட அமைச்சர்:
அரசாங்க சேவையில் ஆட்களைச் சேர்க்கும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். எனவே எவரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.,கடந்த எட்டு மாதங்களில் 62 314 பேரை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தொழிலின்றி உள்ளோருக்கு வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எமது அரசாங்கம் கண்மூடித்தனமாக ஆட்சேர்ப்புச் செய்யாது. பொதுச் சேவையை திறம்பட நிர்வகிக்கும் திட்டத்துடனே ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறும்.
அரச சேவையில் ஆட்களைச் சேர்ப்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதற்கு பிரதமரின் செயலாளரின் தலைமையில், ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேவைாயன ஆளணிகள் குறித்து இக்குழுவுக்கே அமைச்சுக்கள் பரிந்துரைக்க வேண்டும்.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்ய அனுமதிக்க ப்பட்ட 62,314 பேரில்,பலர் ஏற்கனவே சேவையில் இணைக்கப்ப ட்டுள்ளனர்.
வேறு சிலருக்கான தேர்வுகள் மற்றும் நேர்காண ல்கள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு அமைச்சுக்கு 12,433 பேரை இணைத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில்,4415 இராணுவ வீரர்களும் உள்ளடங்குவர். சுகாதாரத் துறையிலு ம் ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கிணங்க 1408 மருத்துவ அதிகாரிகள், 3147 தாதியர் அதிகாரிகள், 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், 1000 உதவியாளர்கள் மற்றும் 1939 சுகாதார உதவியாளர்கள் உட்பட 11,889 பேரைச் சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதேபோன்று 1000 தபால் உதவியாளர்கள், 1000 பதிவு செய்யப்பட்ட மாற்று அதிகாரிகள், 600 தபால் சேவை அதிகாரிகள் மற்றும் 378 துணை தபால் அதிகாரிகள் ஆகியோர் தபால் திணைக்களத்தில் இணைக் கப்பட்டுள்ளனர். தேவைக்கேற்ப கிட்டத்தட்ட அனைத்து அமைச் சகங்களிலும் ஆட்சேர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.