web log free
May 06, 2025
kumar

kumar

 

 

சினிமா துறையில் முன்னணியாக விளங்கும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவின் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளம் கடந்த 2010-ம் ஆண்டில் புகைப்படங்களை மட்டும் பகிரும் ஒரு செயலியாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக உலகளாவிய ஒரு சமூக வலைதளமாக தன்னை நிறுவிக் கொண்டுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் செயலியை பிரபலங்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வெறுமனே தங்களுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு மட்டும் இந்த செயலியை பயன்படுத்துவதில்லை. அவர்களைப் பின்தொடர்பவர்களிடம் பலதரப்பட்ட பிராண்டுகளின் விளம்பரத்தை கொண்டு சேர்க்கவும் பயன்படுத்துகின்றனர். பாலிவுட் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பிராண்டுகளை விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் பணம் வாங்குகின்றனர்.


பிரியங்கா சோப்ரா
பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 7.3 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் (FOLLOWERS). இன்ஸ்டாகிராமில் அதிக பணம் பெறும் பொலிவுட் பிரபலங்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1.8 கோடி ரூபாய் வாங்குகிறார்.


ஆலியா பட்
நடிகை ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் 5.8 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வாங்குகிறார்.


ஷாருக்கான்
பொலிவுட்டின் அரசன் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். ஷாருக்கானை 2.7 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.


தீபிகா படுகோனே
பொலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையான தீபிகா படுகோனேவை இன்ஸ்டாகிராமில் 6.4 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய் வரை ஒரு பதிவிற்கு வாங்குகிறார்.


அக்‌ஷய் குமார்
பொலிவுட்டின் கில்லாடி என்று அழைக்கப்படும் அக்‌ஷய் குமார் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். அக்‌ஷய் குமாரை 5.9 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

நாட்டில் சில பகுதிகளில் தற்சமயம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நடைமுறையை செயற்படுத்துவதாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்ததாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 12 வருடங்கள் கடந்தும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை 46/1 தீர்மானம் உள்ளடங்களாக 07 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், இலங்கை அரசாங்கமும் பெருமளவுக்கு அமுல்படுத்தப்படாத கடப்பாட்டு அறிக்கைகளை விடுத்துள்ளதாக இரா. சம்பந்தன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் நடைமுறையை செயற்படுத்தாத அரசாங்கம், இராணுவமயப்படுத்துதல், சமூக மற்றும் ஊடகத் துறையினர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உயிரிழந்த உறவுகளை நிறைவுகூருவோரை புதிதாக கைது செய்வதோடு அரசியல் கைதிகளை கால வரையறை அற்று தடுத்து வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு எனும் போர்வையில் இடம்பெறுகின்ற காணி சூறையாடல்களையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்துள்ளார்.

ஐக்கிய மற்றும் பிரிபடாத இலங்கைக்குள் வட, கிழக்கு மாகாணங்களில் சுய மரியாதையோடும்  கன்னியத்தோடும் பாதுகாப்புடனும் தமிழ் மக்கள் வாழ்வதை உறுதிப்படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கத்தை தூண்டுதல் செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமது கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதை சமாளிக்க பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்று வருகிறது. கடந்த மாதம் உணவுப்பொருள் இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசுக்கு ரூ.6700 கோடி கடனுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில் தற்போது இலங்கைக்கு தேவையான எரிபொருட்களை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் இல்லாமல் அனல் மின்நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் முக்கிய நேரங்களில் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சீர் செய்ய, நாட்டின் எரிபொருள் தேவைக்காக பெட்ரோல், டீசலை வழங்குமாறு இலங்கை அரசு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சு வார்த்தையில் இலங்கைக்கு சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை வெளியீடு ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் இந்தியா முழுவதும் பிப்ரவரி 24ம் தேதி வலிமை வெளியாகிறது.

படத்தில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாக அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த நால்வரையும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணயில் விடுவிக்குமாறு
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி, நேற்று (02)
உத்தரவிட்டார்.

மேலும், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்
கையொப்பமிடுமாறும் கட்டளை பிறப்பித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அரசால் தடைசெய்யப்பட்ட
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தையிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர்
பிரபாகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பேஸ்புக்கில் தரவேற்றம் செய்த
குற்றச்சாட்டில் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

கே.ஜெகன், வை. யோகேஸ்வரன், டபிள்யூ. விவேக், கே. சோபானந்தன் ஆகியேர்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின்
ஆலோசனை கிடைக்கும் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு
எடுக்கப்பட்டபோது சட்டமா அதிபர் ஆலோசனைக்கமைய பிணையில்
விடுவிக்கப்பட்டனர்.


மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்.ஐ.டி. பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், டி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் கணவர் மனைவியிடம் சம்மதம் இன்றி கட்டாய உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமா என்ற கோணத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

இந்த நாட்டில் நடக்கிற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியதில்லை. அதே போல இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என்று கருதுவதும் நல்லதல்ல.

தற்போது இதுகுறித்த வழக்கு ஒன்று நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவை விதி எண்.47 அனுமதிக்காது.

மாநில அரசுகளுடன் இணைந்து பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இலவச உதவி எண்கள் செயல்பட்டு வருகின்றன. அவை 66 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி உள்ளன. தவிரவும், செயல்பட்டு வரும் 703 ‘ஒன் ஸ்டாப்’ மையங்களும் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி பெற்றிருக்கின்றனர்.

நமது நாட்டில் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பது அனைவரின் முன்னுரிமை ஆகும்.

இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

அதைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி,“வலுக்கட்டாயமாக கணவன், மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதை தண்டிக்கத்தக்க கிரிமினல் குற்றமாக அரசு அறிவிக்க ஆதரவாக உள்ளதா? இதன்மூலம் திருமணம் என்ற நிகழ்வே முடிவுக்கு வந்துவிடும்” என மற்றொரு கேள்வியையும் எழுப்பினார்.

இந்த வழக்கு நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளதால் பதில் அளிக்க முடியாது எனவும், 2017-ல் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த ஒரு சட்டமும் வரையறுக்கபடவில்லை, மேற்கத்திய நாடுகளில் இது குற்றமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவும் இதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகபடுத்தும் அபாயமுள்ளது” என கூறியிருப்பதை குறிப்பிட்டார்.

 

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவின் மகன் ஜெஹான் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் சென்று ஆஜரான பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம வைத்தியபீட மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எத்தனோல் கடத்தல் வழக்கில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரபுக்கள் வருகை பிரிவின் ஊடாக அழைத்து பொலிஸ் நிலையத்தில் பிணை பெற்றுக் கொடுத்த சம்பவத்தில் அருந்திக்க பெனாண்டோ மீது ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் ரஞ்சனின் பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஞ்சன் ராமநாயக்கவும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 4ம் திகதி காலை 11 மணிக்கு ரஞ்சனை வரவேற்க வெலிக்கடை சிறைக்கு முன் வருமாறு அந்த பதிவில் உள்ளது.

கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்க பிரஜையுமான பசில்ராஜபக்‌ஷ கூறியிருப்பது தற்போது சர்சையாகியுள்ளது .

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை,சுயாட்சி போன்றவற்றை மையமாக கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம்.

ஆனால் 2005 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாக போராட்டத்தை முன்னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத்தத்தை முன்னெடுத்து செல்வதற்காக பல கோடிகளை செலவிட்டு ஆயுதங்களை கொள்வனவு செய்தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வேண்டியதாக கூறுகின்றார்கள்.

வடகொரியாவில் இருந்து பல மில்லியன் டொலர்களுக்கு கடன்களாக இராணுவ தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த இராணுவ தளபாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால் பசில் ராஜபக்சவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும் அமெரிக்க பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவுக்கும் (Gotabaya Rajapaksha)தெரியும். அன்றைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்க பிரஜைகளாக இருந்தவர்கள்.

அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர்களை கடத்தி அங்கிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கிறார். நிச்சயமாக அமெரிக்க அரசு பசில் ராஜபக்சவை மாத்திரமன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழிநடத்திய தலைவர்களையும் விசாரிக்க வேண்டும்.

அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது. யுத்தத்திற்காக கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனித படுகொலைக்கும் ,மனித உரிமை மீறலுக்குமாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப்பட்டது என்பதுதான் முக்கியமான விடயம்.

இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப்போவது கிடையாது .ஆனால் இவற்றை மேற்கொண்டது அமெரிக்க பிரைஜைகள் என்ற அடிப்படையிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந்தபட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பசில் ராஜபக்சவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றியதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலையில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது ,எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலமை இருக்கிறது நாளாந்தம் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது ,அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள்ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது.

ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை தேவை. ஒரு பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்க பிரஜை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசாரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd