ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி வேறு எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தான் அரசியலில் பிறந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வளர்ந்து, கட்சிக்காக பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளானேன் என கூறும் முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே மரணிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கா தத்துவத்தை தாம் பாராட்டுவதாகவும், அந்தத் தத்துவத்திற்கு அமைவாக அரசியலில் ஈடுபடும் எந்தவொரு அரசியல் குழுவிற்கும் ஆலோசனை வழங்கத் தயங்குவதில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் இரண்டு தேசிய நெருக்கடிகளுக்கு நிரந்தர கணிசமான தீர்வுகளை வழங்குவது மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவது போன்ற விஷயங்களில் மட்டுமே நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற முறையில் தனது ஆலோசனைகளை வழங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான கொள்கைகளை பின்பற்றுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் பலவீனமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் கட்சிக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் போது, உண்மையான கட்சி உறுப்பினர்களுக்காக தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க இன்றும் நாளையும் எதிர்காலத்திலும் தன்னை அர்ப்பணிப்பேன் எனவும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.