web log free
October 18, 2024

இலங்கையில் சிறுநீரக கடத்தல் வியாபாரத்தில் பொலிஸார்

சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தரகர் என கூறப்படும் நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம், சந்தேக நபரின் முகத்தை மறைத்து அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் முகம் மறைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், நாட்டின் குற்றவியல் வரலாற்றில் இந்த வழக்கு விசேடமானது என நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

" இது மிகவும் விசேஷமான வழக்கு. கொழும்பு நகரின் ஏழைப் பிரிவினரை குறிவைத்து மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குழு மனித உறுப்புக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. 

"இந்த கடத்தலை மிகவும் திட்டமிட்ட கும்பல் நடத்தியது. போதைப்பொருள், மருந்து, ஆயுதக் கடத்தல் கும்பலைப் போலவே, இந்த கடத்தலும் மிகவும் பிரபலமானது. சந்தேகத்திற்குரிய இந்த தரகர் 30 முதல் 42 வயதுடையவர்களிடம் 50 லட்சம் முதல் 120 லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாகக் கூறி சிறுநீரகங்களைப் பெற்றுள்ளார்.

"இவ்வாறு 05 பேரிடம் இருந்து மனித உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்கப்படுவதில்லை. எனவே பணம் வழங்கப்படவில்லை என கூறி மரியதாஸ் என்ற நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்."

“இவ்வாறு சிறுநீரகம் வழங்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரும் உள்ளார், அவர் தாய்ப்பால் கொடுப்பவர். மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த கடத்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரக கடத்தலின் பரிமாற்ற மையமாக பொரளை தனியார் வைத்தியசாலை செயல்படுகிறது. அந்த வைத்தியசாலையில் ஒரு பேராசிரியரும் இருக்கிறார். அந்த மருத்துவமனை வைத்திர்களுக்கும் இந்த கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?" என விசாரணை நடந்து வருகிறது." என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,

"இவ்வாறு சிறுநீரகம் வழங்கியவர்கள் பொரளை பிரதேசத்தில் உள்ள குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்று குழப்பம் செய்துள்ளனர். அப்போது, ​​குழப்பத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கி, இனி குழப்பம் விளைவிக்க வேண்டாம், அப்படி செய்தால் கை கால்களை உடைத்து விடுவேன்´ என மிரட்டியுள்ளனர்."

"இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த கடத்தல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி எப்படி தலையிட்டார்? இந்த கடத்தலின் பின்னணியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வைத்தியசாலையில் 52 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. "ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வலையமைப்பில் இடம்பெறும் குற்றச் செயல். மேலும், இது சிக்கலான விசாரணையாகும்" என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். .

அதனையடுத்து, நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தரகரான சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்து அடையாள அணிவகுப்புக்கு அனுப்ப உத்தரவிடுமாறு கோரினார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 06 பேர் விசாரணைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதால் அவர்களின் பயணத்தை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், குறித்த தரகர் சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 06 பேர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பித்த நீதவான், அது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.