web log free
November 28, 2024

சமத்துவமற்ற வகையில் இலங்கையில் தேயிலைத் துறை மறுசீரமைப்பு. - சிக்கல்களுக்கு காரணம் இதுவே என்கிறார் திலகர்

சமத்துவமற்ற வகையில் இலங்கையில் தேயிலைத் துறை மறுசீரமைப்பு.
- சிக்கல்களுக்கு காரணம் இதுவே என்கிறார் திலகர்

பிரித்தானியரால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை தொழிற்றுறையானது சுதந்திரத்துக்குப்பின் இனவாத அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு. வருவதன் காரணமாகவே அந்தத் தொழிற்றுறை மிகுந்த சிக்கல் நிறைந்ததாகவும் அதில் தங்கி வாழும் சமூகத்தினர் ஏற்றத்தாழ்வு நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

வறுமை ஒழிப்புக்கான தென்னாசிய கூட்டமைப்பு ஒழுங்கு செய்த தென் ஆசிய பிராந்தியத்தில் தேயிலைத் தொழிலும் தொழிலாளர் நிலையும்' எனும் தொணிப்பொருளிலான செயலமர்வு
கொழும்பில் (06/12) நடைபெற்றது.

நிலைபேறானதும் நியாயமானதுமான தேயிலைப் பெறுமதி தொடர்பை வலியுறுத்தும் வகையில் தேயிலைத் தொழில் துறையில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வாளர்களான சுசோவன் தார் (இந்தியா) சிவம். பிரபா (இலங்கை), சதீர் ஸ்ரேஷ்தா(நேபாளம்) ஆகியோர் தமது நாடுகளை பிரதிநிதித்துவம் செய்து சமர்ப்பித்த அறிக்கைகளை சமர்ப்பித்து கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கைப் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு அலகின் பணிப்பாளர், சிவில் சமூக, தொழிற்சங்கப் பிரிதநிதிகள் கலந்து கொண்ட அந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறை பிரித்தானியர் அறிமுகம் செய்ததில் இருந்து சுதந்திரம் அடையும்வரை 100 % பிரித்தானியரின் கம்பனிகள் வசமே அதாவது தனியார் வசமே இருந்தன. எனினும் சுதந்திரத்தின் பின்னர் அதன் உரிமத்தில் மாற்றம் கொண்டுவந்து 1972 ஆம் ஆண்டு ஆகும்போது சிறுதோட்டங்கள் 25 % மாகவும் பெருந்தோட்டங்கள் 75% ஆகவும் மாறின. அதுவே 1992 ல் ஐம்பதுக்கு ஐம்பது என்றும் இப்போது 2022 ல் 25 % பெருந்தோட்டங்களும் 75 % சிறுதோட்டங்களும் என மாற்றம் கண்டுள்ளது. 2050 ஆம் ஆண்டு ஆகும்போது இந்த நாட்டில் 1% பெருந்தோட்டங்களும் 99% சதவீதம் சிறுதோடரடங்களும் என அமைப்பதற்கு தேசிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரங்களும் உண்டு . மறுபுறத்தில் 1992 ஆம் ஆண்டு ஐந்து முதல் ஆறு லட்சமாக இருந்த தமிழ் தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கை இப்போது ஒருலட்சம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதுடன் 75 ஆயிரமாக இருந்த சிறுதோட்ட உடமையாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் 99.9% சிங்கள மக்களாவர். இந்த புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையில் தேயிலைத் தொழில்துறை இனவாத அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. தோட்டக் கம்பனிகளும் ஒரு பொது முறைமையில் அல்லாது அவரவர் நினைத்த படி தோட்டங்களை நடாத்தி வருகின்றன. தொழிலாளர்களுக்கு நில அருமையற்ற அவிட்குரோவர் முறையே மலைநாட்டு பகுதியில் அமுல்படுத்தப்படுகிறது. சிங்கள மக்கள் நிலம் காணி உரிமை வழங்கப்பட்டு சிறுதோட்ட உடைமையாளர்களாக்கப்படும் அதேநேரம் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் நாட்கூலி வேலையையும் இழக்கும் நிலைமையும் காணப்படுகிறது. இந்த நிலைமையானது இலங்கையில் ஒரே தொழில் துறையில் சமத்துவமற்ற வகையில் சமூகங்கள் கையளப்படுவதையும் காட்டி நிற்கிறது. தேயிலை ஏற்றுமதி மூலம் வருமானம் உழைக்கும் கம்பனிகள் அந்த தேயிலையை உற்பத்தி செய்யும் மக்களுக்காக தமது லாபத்தில் ஒரு பகுதியைக் கூட செவழிப்பதில்லை என்றும் தெரிவித்தார். ஆய்வு அறிக்கையின் பிரதிகளும் வருகை ஆய்வாளர்களால் தந்தோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Last modified on Thursday, 08 December 2022 05:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd