web log free
October 18, 2024

அமைச்சரவை நியமனம் மீண்டும் தாமதம்

புதிய அமைச்சர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னர் புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் புதிதாக 12 அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான பட்டியல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்தது.

பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பிறகு புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என்றும், ஆனால் அது மேலும் தாமதமாகும் என்றும் வதந்திகள் பரவின.

அமைச்சரவையில் தற்போது 18 பேர் அங்கம் வகிக்கின்றனர், அரசியலமைப்பின் பிரகாரம் மேலும் 12 அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி, 12 புதிய அமைச்சர்கள் நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பிறகு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன, தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் மற்றும் சமகி ஜன பலவேகயவின் பலமான உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோரும் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், எஞ்சியவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.