web log free
November 28, 2024

சர்வகட்சி கூட்டமும் ரணிலின் உறுதியும்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை அளவில் ஏற்றுள்ளன என்று அறியமுடிகின்றது. 

அத்துடன், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களுக்கும் உடனடி தீர்வுகளை வழங்குவது சம்பந்தமாக சாதகமாக ஆராயப்பட்டுள்ளன. 

நல்லிணக்கத்துக்கான சர்வக்கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜே.வி.பி. என்பன சர்வக்கட்சி கூட்டத்தை புறக்கணித்திருந்தன. விமல், கம்மன்பில உள்ளிட்டோர் பங்கேற்காவிட்டாலும், அவர்களின் கூட்டணி பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

சுமார் 2 மணி நேரம்வரை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாகவே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

2023 பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், அரசமைப்பில் தற்போது ஓர் அங்கமாகவுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆரம்ப புள்ளியாக கருதி, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முடிவும் எனவும் அவர் கூறியுள்ளார். மலையக தமிழர்களின் அபிலாஷைகள் பற்றியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு காலமெடுக்கும் என்பதால், என்ன அடிப்படையிலான தீர்வு என்ற இணக்கப்பாட்டுக்கு பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் வர வேண்டும் என ஜனாதிபதி தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு முடியாத பட்சத்தில், இயலாமை தொடர்பில் அறிக்கையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

" புதிய அரசமைப்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்படக்கூடும், ஆனால் தீர்வு பற்றி இணக்கப்பாட்டு ஆவணத்தை வழங்கினால் அது நம்பகமாக இருக்கும்." என இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேபோல வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

" படையினர், வன திணைக்களம், மகாவலி அதிகார சபை என்பன ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களின் காணிகள், சுதந்திர தினத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும். காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை வரவேற்கின்றோம். ஏனையோரும் விடுவிக்கப்பட வேண்டும். " எனவும் சம்பந்தன் இடித்துரைத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பற்றி கருத்து வெளியிடுகையில்,  

" காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள். தற்போது நாடகமாடவேண்டியதில்லை. எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பொறுப்புகூறப்பட வேண்டும் அதனை உடனடியாக செய்யலாம்." எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தான் இவ்வாறு கருத்து வெளியிட்டதை சம்பந்தன் உறுதிப்படுத்தினார். 

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உடனடியாக கோரப்பட்ட தீர்வுகளுக்கு, நிறைவேற்று அதிகாரத்துறையில் இடம்பெறவேண்டிய பொறுப்பு உரிய வகையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.   

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அது குறித்து முடிவு எட்டப்படவில்லை. 

அடுத்த சுற்று பேச்சை ஜனவரி முற்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

" தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதுபோல, படையினரையும் விடுவித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்." - என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd