2023 ஆம் ஆண்டு முதல் ஐந்து வருடங்களுக்கு பயிர் செய்யப்படாத அனைத்து வயல் நிலங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுவரை 100,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், 2023 ஆம் ஆண்டு அனைத்து வயல் நிலங்களும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் விவசாயம் செய்யப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், தரிசு நிலங்கள் அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு விவசாய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரை உழவு செய்யப்படாத தரிசு நிலங்களின் உரிமையாளர்கள் மீண்டும் நடவு செய்தால் பிரச்சினை இல்லை என்றும், விவசாயம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஐந்தாண்டுகளின் பின்னர் அந்தந்த காணிகளில் பயிர் செய்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து நில உரிமையாளர்கள் தேவையானால் விவசாயம் செய்ய முடியும் எனவும், விவசாயம் செய்யாத பட்சத்தில் காணியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.