இம்மாத இறுதியில் 12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 06 ஆளுநர்களும் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்குமெனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இதற்கு முன்னர் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருந்த நிலையில், அது தாமதமாகி வந்தது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியும், தெற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசாங்கத்திடம் இருந்து தமக்கு எவ்வித அக்கறையும் இல்லை என முறைப்பாடு செய்திருந்தனர்.