உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடம் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கட்டுப்பணம் பெறக்கூடாது என்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு உத்தரவிடக்கோரும் ரிட் மனுவை, ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) தாக்கல் செய்தது.
2023 ஜனவரி 10 ஆம் திகதியன்று, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் ஹபுகின்னவினால், வெளியிடப்பட்ட கடிதத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில், அமைச்சரவை செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் சட்டமா அதிபர் உட்பட 85 பேர். பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.