தேர்தல் பிரசாரங்களுக்கு பணம் வழங்கும் கட்சிகளை வெளிப்படுத்தும் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், கட்சித் தலைவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்கு பணம் செலவழிக்கும் கட்சிகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க தேர்தல் செலவு ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டது.
நேற்று (17ஆம் திகதி) எதிர்கட்சித் தலைவர்கள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைச் சந்தித்து அந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கு தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.
நீதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்ததன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டமூலத்தை இலங்கையின் சிவில் சமூகம் மற்றும் பல வெகுஜன அமைப்புகளிடம் கொண்டு வருமாறு அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், அதனை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.