web log free
September 08, 2024

இந்தியாவினால் தான் தப்பிப் பிழைத்தோம் - நன்றி கூறும் இலங்கை

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டிருப்பதற்கு இந்தியாவின் உதவியே மிக முக்கிய காரணம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஜெய்சங்கரும், அலி சப்ரியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அலி சப்ரி, ''நாங்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டுள்ளோம். இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அரசின் உதவிதான். இது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல.

அத்தியாவசியப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள் என 4 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. இந்த உதவிதான் இலங்கை ஓரளவு மீள மிக முக்கிய காரணம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய அரசுக்கு, இந்திய மக்களுக்கு இலங்கை அதிபர் சார்பிலும் இலங்கை மக்கள் சார்பிலும் ஆழமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் அளிக்க இந்தியா அளித்த உத்தரவாதமே காரணம். இந்தியாதான் முதன்முதலாக இலங்கைக்கு உத்தரவாதம் அளித்தது. அதற்காகவும் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய ஜெய்சங்கர், ''பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெளிவர எவ்வாறு உதவ முடியுமோ அதை இந்தியா உடனடியாகச் செய்தது. இலங்கைக்கு உதவும் மற்ற நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக காத்திருக்காமல் இந்தியா உதவியது. இலங்கைக்கு கடன் அளிக்கும் விவகாரத்தில், சர்வதேச அமைப்புகள் தயக்கமின்றி கடனுதவி அளித்து இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது'' என தெரிவித்தார்.