நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள் , உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்
01:- அப்துல் ரஹீம் (55)
02:- ஆயிஷா பாத்திமா (45)
03:- மரியம் (13)
04:- நபீஹா (08)
05:- ரஹீம் (14)
06:- நேசராஜ் பிள்ளை (25) (சாரதி)
ஆட்டோ சாரதி
07:- சன்முகராஜ் (25)
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ், மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில் அதிக வேகம் காரணமாகவும், 'பிரேக்' செயற்படாததாலும் நானுஓயா - ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் ஆட்டோவொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் சுமார் 50 அடிவரை பள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. வேனும், ஆட்டோவும் கடுமையாக சேதமானது.
இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
காயமடைந்த மாணவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை ஹொலிகொப்டர்மூலம் கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.