சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை கோரி இலங்கை இராணுவத்துக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்க்குமாரும் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய விசாரணையில் ஆஜராகி இருந்தனர்.
மேலதிகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் ஆணைக்குழு முன்பாக மேன்முறையீட்டாளர் சார்பில் ஆஜராகி, சரணடைந்த புலிகள் தொடர்பான விவர பட்டியல் இராணுவத்திடம் இருப்பதாகக்கூறி ஆதாரங்களை முன்வைத்தார்.
இதன்போது, இராணுவம் சார்பில் இராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான ரவிந்திர பத்திரகே இணைய வழியில் ஆணைக்குழுவில் ஆஜரானமைக்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.
இதுவொரு முக்கியமான விசாரணை என்பதால் நேரடியாகவே ஆணைக்குழுவுக்கு முன்பு முன்னிலையாக வேண்டும் என இராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதன்படி மார்ச் 28ஆம் திகதி இராணுவம் நேரடியாக ஆணைக்குழுவில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவலறியும் விண்ணப்பம் ஒன்றுக்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என RTI சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புலிகள் தொடர்பான தகவல்களை கோரும் இந்த விண்ணப்பத்துக்கு சுமார் 4 வருடங்களாக பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.