web log free
September 08, 2024

உள்ளூராட்சி தேர்தலும் வேட்பாளர் தெரிவும் - சூரியகாந்தி

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் ,அனுமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி சில வெறுக்கத்தக்க சம்பவங்கள் வேட்பாளர்கள் தெரிவுகளில் போது இடம்பெற்றுள்ளதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் சேவை குறித்து எவ்விதத்திலும் கண்டு கொள்ளாமல் நாட்காலிகளை சூடாக்கிக்கொண்டிருந்த பழைய முகங்களை சில கட்சிகள் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கவுள்ளதாக பெரும்பாலான மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாம் தெரிவு செய்து அனுப்பும் வேட்பாளர் எப்படியானவர் என்பது குறித்த தெளிவுகள் அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ளன. அதாவது குறித்த நபர் உள்ளூராட்சி மன்றங்களுக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது அதையும் தாண்டி பாராளுமன்றத்துக்கோ செல்லும் வரையில், அவர் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்றவராகவே இருப்பார் என்பதில் சந்தேகங்களில்லை.

ஆனால் உள்ளே சென்ற பிறகு அவரின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களே இங்கு முக்கியமானவை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே மக்கள் சேவையில் தம்மை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

எதிர்கட்சி வரிசைகளில் இருந்தாலும் கூட மக்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்கின்றனர். விவாதங்களை முன்னெடுக்கின்றனர். மீண்டும் தேர்தல் வரும் போது தைரியமாக மக்கள் முன் சென்று வாக்கு கேட்கின்றனர்.

ஆனால் ஆளும் தரப்பிலிருந்து கொண்டு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உறுப்பினர்களில் அதிகமானோர் முதலில் தாம் கரையேறும் வழிகளையே பார்க்கின்றனர். மக்களைப் பற்றிய சிந்தனை அவர்களுக்கு அடுத்த தேர்தல் வரும் வரை தோன்றுவதில்லை. காரணம் அவர்கள் அதிகார பீடத்துக்கு சென்றதன் நோக்கம் அதுவல்ல.

அடுத்த தேர்தலில் தம்மால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் அவர்கள் இயன்ற வரை தமக்கும் தமது உறவினர்களுக்கும் சொத்துகளை சேர்த்து விட்டு பின்பு கட்சி பணிகளில் தம்மை இணைத்துக்கொள்வர். கட்சிகளின் தலைமைத்துவங்கள் இதை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் உறுப்பினர்கள் அடிக்கும் கொள்ளைகளில் அவர்களுக்கும் பங்கில்லாமலில்லை.

மக்களோடு மக்களாக அவர்கள் அருகிலிருந்து அரசியல் செய்யும் நிறுவனங்களாவே உள்ளூராட்சி சபைகள் விளங்குகின்றன. ஆனால் இப்போது சில உறுப்பினர்களின் செயற்பாடுகளால் அவை பாராளுமன்றம் அளவுக்கு மக்களிடமிருந்து தூரபோய்க் கொண்டிருக்கின்றன.

எவ்விதத்திலும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயது, தேடிப்பார்க்காது தமக்குரிய சலுகைகளை மாத்திரம் மாத்திரம் குறியாகக்கொண்டு சில உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களினதும் உறுப்பினர்களினதும் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மீதான நம்பிக்கைகளை இழக்கச்செய்துள்ளது.

அவர்களை மீண்டும் தெரிவு செய்யும் வகையில் சில கட்சித் தலைமைகள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர்களை இடம்பெறச்செய்துள்ளது.

மேலும் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட ஐந்து வருடங்களாக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் நாட்காலிகளை சூடாக்கிச் சென்றவர்களும் எவ்வித பிரச்சினைகளுமின்றி மீண்டும் போட்டி போட தயாராகி வருகின்றனர்.

வேட்பாளர்களைத் தெரிவு செய்ய பல கட்சிகள் சமூக ஊடகங்களில் விண்ணப்பங்களை கோரியிருந்தன. நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் விண்ணப்பிப்போர் எவ்வாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்த எந்த கரிசனைகளையும் எந்த கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அது குறித்த அக்கறையை இப்போதுள்ள கட்சிகளிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையோர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் வலம் வரும் போது, உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தால் என்ன என்ற மன ஆறுதல் தான் இவற்றுக்கெல்லாம் காரணம். தேசிய கட்சிகள் அவ்வாறான கொள்கைகளில் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஏன் அந்த வழியை பின்பற்ற வேண்டும்?

நேர்மையான அரசியலையும் ஜனநாயக பண்புகளையும் நேசிக்கும் அதே வேளை அதன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இளைஞர்களும் கள அரசியலில் ஈடுபடாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஜனரஞ்சக அரசியலை முன்னெடுக்கும் பாரம்பரிய கட்சிகள் இந்த தவறுகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் செய்கின்றன. இதன் காரணமாகவே சில கட்சிகளையும் உறுப்பினர்களையும் குற்றப்பரம்பரையாகவே மக்கள் நோக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.

தேர்தல்கள் மற்றும் வாக்களித்தல் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை தோன்றுவதற்கு இவையே பிரதான காரணிகள். மேலும் நல்லாட்சி எண்ணக்கருக்கள், அது தொடர்பான சிந்தனைகள் உருவாவதையும் இவ்வாறான செயற்பாடுகள் தடுக்கின்றன. அரசியல் நிர்வாக கட்டமைப்பில் உள்ளூராட்சி நிறுவனங்கள் கீழ் மட்டத்திலிருந்து மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய அமைப்புகள். இவற்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் கட்சித் தலைவர்களா அல்லது வாக்களிக்கும் மக்களா ?

Last modified on Thursday, 26 January 2023 09:11