web log free
November 27, 2024

பல கட்சிகள் பங்கேற்காத சர்வகட்சி கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி கூட்டம் இன்று (26) பிற்பகல் ஆரம்பமானது.

கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஆளும், எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நல்லிணக்கத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. எனினும், இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளவில்லை. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பங்குபற்றுவதாக அறிவித்திருந்தது. 

ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் தாம் கூட்டத்தில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், PLOTE எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கட்சி என்ற ரீதியில் தாம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ், உத்தர லங்கா சபாவ கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.

சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்தது.

மலையக தமிழர் பிரச்சினை பற்றி இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படாவிட்டால், அதில் ஏன் பங்கேற்க வேண்டும் என கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான செயற்பாட்டில், மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தாலும் ஜனாதிபதியிடமிருந்து அதிகாரபூர்வமான பதில் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கை குறித்து தமது கூட்டணி அதிருப்தியடைந்துள்ளதாகவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd