அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன்.
எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை என்னிடம் தாராளமாக எடுத்துக்கூறலாம். என்னால் முடிந்தவற்றை செய்து தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ளேன் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஊடாகவே பாராளுமன்றம் பிரவேசித்தார். ஆரம்பத்தில் அவர் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் விசேட காணோளி மூலமாக விரிவாக விளக்கியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றது முதல் இன்று வரை எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது, மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமையாகும்.
2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தபோது, எனது அமைச்சின் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்துக்காக 680.79 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 396.48 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
வாழ்வாதார அபிவிருத்திகளுக்காக 68.83 மில்லியன் ரூபாவில் செலவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு 2.08 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்துடன், இந்திய வீடமைப்பு திட்டத்துக்காக 2020 ஆம் ஆண்டில் 0.88 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
அந்தவகையில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் மேற்படி திட்டங்களுக்காக 1,236.18 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றும் வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காகவும் தனியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன.
2021 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் அமைச்சின் ஊடாக வருகின்ற வீடமைப்பு திட்டத்துக்காக 314.37 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை.
எனவே, வீடமைப்பு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 385.24 ரூபா ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
அதேபோல 2021 இல் இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகளை நிர்மாணிக்க 1084.11 ரூபா செலவளிக்கப்பட்டது. கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் என்பதால் இக்கால கட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. இதனால் இந்திய வீடமைப்பு திட்டமும் சற்று தாமதமானது.
2021 ஆம் ஆண்டில் 93 வீதிகள் அமைக்கப்பட்டன. பொது வேலைத்திட்டங்களும் (அபிவிருத்தி, உட்கட்டமைப்பு) முன்னெடுக்கப்பட்டன. இவ்விரு திட்டங்களுக்காகவும் 177.13 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல புதிதாக 25 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக 42.70 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. தகரம் மாற்றும் 34 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்காக 4.70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. வடிகாலமைப்பு சம்பந்தமாக 220 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்காக 21.40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
ஆரம்ப பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சம்பந்தமான 12 வேலைத்திட்டங்கள் 15.77 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டன. நீர்வளங்கள் திட்டத்தின்கீழ் 6 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக 4.93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். இந்திய வீடமைப்பு திட்டத்தையும் அமுல்படுத்த உத்தேசித்திருந்தோம். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள், எம்மை அரசிலிருந்து வெளியேற வைத்தன. ஏப்ரல் 05 ஆம் திகதி பதவி விலகல் கடிதத்தை கையளித்தேன்.
அதன்பின்னர் ஜனாதிபதியும் பதவி விலக நேரிட்டது. பொருளாதார நெருக்கடியும் உக்கிரம் அடைந்தது. இதனால் எம்மால் எதிர்பார்த்தளவு வேலைத்திட்டங்களை 2022 ஆம் முன்னெடுக்க முடியாமல்போனது. எனினும், ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று காலப்பகுதிக்குள் அமைச்சின் ஊடாக இடம்பெற்ற வீடமைப்பு திட்டத்துக்காக 164.69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் 154. 03 மில்லியன் ரூபா செலவளித்திருந்தோம். உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 138.13 மில்லியன் ரூபா செலவளித்தோம்.
இவ்வாறு கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். என்மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தனர். எனவே, அவர்களுக்கு உண்மையுள்ளவராக சேவை செய்துள்ளேன் என நம்புகின்றேன். இவற்றை விளம்பரப்படுத்தாதவே நாம் செய்த தவறு, அதனால்தான் விமர்சனங்கள் எழுகின்றன.
தற்போது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக செயற்படுகின்றேன். எனவே, மக்களுக்கு அதிகளவான சேவைகளை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாகும். மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கும். அவர்கள் எந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள், பேஸ் புக் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக எனக்கு தகவல் தாருங்கள். என்னால் முடிந்தவற்றை மக்களுக்கு நிச்சயம் செய்வேன்.
இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். டில்லியில் நடைபெற்ற பேச்சில் சாதகமான பதில் கிடைத்துள்ளது. மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றேன்.சிறு தாமதம் ஏற்படலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்றார்.