புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதற்காக நாட்டின் கிழக்கு துறைமுக மாவட்டமான திருகோணமலையில் 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை இரண்டு கட்டங்களில் கட்டுவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன.
2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சாரத் தேவையில் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
"இந்திய தேசிய அனல் மின் கழகமும், இலங்கை மின்சார வாரியமும் இணைந்து சூரிய மின்சக்தி திட்டத்தை இரண்டு கட்டங்களில் செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன" என்று இந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்தவும், சம்பூரிலிருந்து கப்பல்துறை வரையிலான 40 கி.மீ நீளம் கொண்ட 220 கிலோவாட் மின்கடத்தலை அமைக்கவும், 23.6 அமெரிக்க டொலர் செலவாகும். 2024 முதல் 2025 வரை இரண்டு ஆண்டுகளில் இந்த கட்டத்தை முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மொத்தம் 72 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கூடுதலாக 85 மெகாவாட் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம், கடலோரக் காற்று மற்றும் உயிர்ப் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தித் திட்டங்களை இயக்கி எளிதாக்குவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தனியார் மற்றும் அரச தொழில்முனைவோர்களின் ஒத்துழைப்புடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட இடங்களில் இந்தியா தொடர்ச்சியான உள்கட்டமைப்புகளை வழங்கும் என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.