ஐக்கிய மக்கள் சக்தியின் இருபது பேர் அரசாங்கத்தில் இணையப்போவதாகவும், நாற்பது பேர் அரசாங்கத்துடன் இணையப்போவதாகவும் பல்வேறு வகையான ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும், ஆனால் தமது உறுப்பினர்கள் எவரும் தற்போதைய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் உண்மையில் நடந்தது என்னவெனில் அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் ஏற்கனவே எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் ஆனால் அரசாங்கத்தில் இணைய விரும்பும் எம்பிக்களுக்கு 20 கோடி ரூபா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது அணி எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைவதாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போலியான செய்திகளை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20 கோடி ரூபாவை வழங்க முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், தமது கட்சியைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இணைவதற்குத் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.