கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சுவையூட்டும் பாலை பருகிய 12 சிறுவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று (04) பிற்பகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
பாரதிபுரம் பிரதேசத்தில் முன்பள்ளிச் சிறார்களுக்கான நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட சுவையூட்டும் திரவப் பாலை அருந்தி மயக்கம், வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு ஒவ்வாமை நிலைமைகள் ஏற்பட்டதையடுத்து பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதனிடையே, குழந்தைகள் அருந்திய சுவையூட்டப்பட்ட திரவ பால் பொதிகளை பரிசோதிக்க, அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மூலம் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.