web log free
October 18, 2024

வளம் நலம் செழிக்க சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரைப் புத்தாண்டு  இன்று (14) மலர்ந்துள்ளது.

"சோபகிருது" எனும் நாமத்தில் பிறந்துள்ள சித்திரைப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். 

சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் வருடங்களை எமது முன்னோர்கள் அறுபதாக வகுத்துள்ளதுடன், பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய வரையில் அந்த அறுபது ஆண்டு பட்டியல் நீள்கிறது. 

படைத்தற்கடவுளான பிரம்மா இந்த அண்டத்தை சித்திரை மாதம் முதல் நாளில் படைத்ததாக புராணங்கள் பறைசாற்றுகின்றன.

மஹாவிஷ்ணு பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக விளங்கும் மச்ச அவதாரமும் சித்திரை மாத வளர்பிறை திதியை அடுத்த மூன்றாவது நாள் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று பிற்பகல் 02 மணி 3 நிமிடத்திலும் திருக்கணித பஞ்சாங்கப்படி 2 மணி 59 நிமிடத்திலும் மலரவுள்ளது. 

வருடப் பிறப்பின்போது தோஷ நச்சத்திரங்களுடையவர்கள் புண்ணிய காலத்தில் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்றளவு தான தருமங்களை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

முற்பகல் 10.03 தொடக்கம் மாலை 6.03 வரை புண்ணிய காலமாகும்.

சித்திரை புத்தாண்டு பிறப்பின்போது வௌ்ளை நிறமுள்ள பட்டாடை மற்றும் வௌ்ளை கரையமைந்த ஆடை அணிவது சிறந்தது என கூறப்பட்டுள்ளது. 

சித்திரைப் புத்தாண்டில் கைவிசேடமும் சிறப்பிடம் பெறுகின்றது.

புதிய வருடத்தில் கைவிசேடத்திற்குரிய நேரங்களாக 

15 ஆம் திகதி முற்பகல் 7.52 முதல் முற்பகல் 9.00 மணி வரையும்

16 ஆம் திகதி முற்பகல் 7.49 முதல் முற்பகல் 9.48 வரையும் கணிக்கப்பட்டுள்ளன.

சித்திரைப் புத்தாண்டுக்காக நாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்கள் இன்முகத்துடன் தயாராகி வருவதை அவதானிக்க முடிந்தது.