web log free
September 08, 2024

அனைவருக்கும் ஆறுதலான சூழலில் புதுவருடம் - ஜனாதிபதி

உதயமாகும் தமிழ், சிங்கள புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும் மகிழ்வும் நிறைந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான சந்தர்ப்பத்தில் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்ததுடன், அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறிய ஆறுதல் தருகின்ற சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அடுத்த புத்தாண்டில் இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளார். 

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் சங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டை மாத்திரமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, நாடு முகங்கொடுத்துள்ள உணவு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், புத்தாண்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, விளைச்சலினால் நாட்டை செழிப்படையச் செய்வதற்காக விவசாய சமூகத்தினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகளை, இந்த புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

தொற்றுநோய் பரவல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் ஆகியன அண்மைக்கால வரலாற்றில் கண்டிராத ஒன்று எனவும் 

இவற்றை மீண்டும் சந்திக்காதிருப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாதிருப்பதற்கும், புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற இனிய புத்தாண்டு இன்று முதல் மலர வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துக்கூறியுள்ளார்.

இருண்ட காலம் முடிவடைந்துவிட்டது எனும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தின் அடிப்படையில், வளமான மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாட்டு மக்கள் உறுதியுடன் ஒன்றுதிரளும் வலிமையைப் பெற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு, பல சவால்களுக்கு மத்தியில் புத்தாண்டு உதயமாகின்ற போதிலும், நாட்டுக்கும் மக்களுக்கும் சுபீட்சமும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்பதே, அனைத்து மக்களினதும் ஒரே நம்பிக்கை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.