web log free
November 27, 2024

கடன் மறுசீரமைப்பு குறித்து கசிந்துள்ள தகவல்

சர்வதேச தனியார் கடன் வழங்குநர்களின் குழுவொன்று இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது முன்மொழிவை இலங்கை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளது.

இதன் பெறுமதி 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தகவல்கள் கசிந்துள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Paris Club-இன் கடன் வழங்குநர்கள் தயாராகும் நிலையில் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டதன் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட முதலாவது முன்மொழிவு இதுவாகும்.

எனினும், இந்த முன்மொழிவு தொடர்பான எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை வௌியாகவில்லை.

அரசாங்க தரப்பும் கடன் வழங்குநர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. 

சுமார் 30 கடனாளர்களின் குழுவில், உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான Amundi Asset Management, BlackRock, HBK Capital Management, T. Rowe Price Group ஆகியவை அடங்குவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான பொதுவான தளமொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd