எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 அக்டோபரில் நடத்தப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போதுள்ள அரசியலமைப்புச் சூழ்நிலையின்படி, ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு 4 வருடங்களின் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்த முடியும்.
முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா கூறுகையில் தற்போதைய ஜனாதிபதி ஒரு பிரதியீட்டு ஜனாதிபதியாக இருப்பதால், அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வ ஆணை அவருக்கு இல்லை என்று கூறுகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை மொட்டு கட்சி முன்வைப்பதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக உள்ள ஜானக ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கையை மதத் தலைவர்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.