web log free
September 09, 2025

IMF யோசனைக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் - ரணில் தரப்புக்கு வெற்றி

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனுதவி தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வாக்கெடுப்பின் போது, சபையில் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அது தொடர்பில் குறித்த கட்சி ஆறு விடயங்களை முன்வைத்திருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் A.H.M. பெளஸி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திசாநாயக்க, அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்த ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, நிமல் லன்ஸா, A.L.M. அதாவுல்லா ஆகியோர் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுதந்திர மக்கள் கூட்டணி, உத்தர லங்கா சபாவ என அரசாங்கத்தில் இருந்து விலகி செயற்படுவோரும், தேசிய மக்கள் சக்தியும் யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd