இந்த நாட்களில் இடியுடன் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதுடன், மின்னல் தாக்கத்தினால் ஒரு மரணமும் நேற்று பதிவாகியுள்ளது.
புத்தளம், பல்லம ஆதம்மன பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் கடையொன்றில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அப்போது அவரது மகள் மின்னல் தாக்குதலுக்கு சில அடிகள் முன்னால் சென்று கொண்டிருந்ததால் சிறுமிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் மக்கள் பாதுகாக்கப்பட்ட கட்டிடத்திலோ அல்லது மூடப்பட்ட வாகனத்திலோ தங்கியிருக்குமாறும், துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இடிமின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் வயர்லெஸ் தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.