web log free
May 05, 2024

டெங்கு மிகவும் அபாயகரமானது, காத்திருக்க வேண்டாம்

சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வருகிறது. அதனால் 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் பொதுவாக மே, ஜூன் மாதங்களில் ஏற்படும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிப்பு ஏற்பட்டுவருகிறது. என்றாலும் கடந்த வருத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி, மார்ச் மாதங்களிலும் அடிக்கடி மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் மழையுடனான காலநிலை தொடரும் நிலை இருப்பதால் டெங்கு நோய் அதிகரிக்கும் சாத்தியக்கூறு அதிகமாகவே இருக்கிறது.

மேலும் இதுவரைக்கும் உள்ள அறிக்கையின் பிரகாரம் மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

அதனால் இந்த பிரதேசங்களில் இருப்பவர்கள் யாருக்காவது 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அவர்கள் உடனடியாக வைத்தியரை நாடி, மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

அதேநேரம் நாற்பட்ட நோயாளர்கள், வயோதிபர்கள் 48 மணிநேரம் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் அவர்கள் தங்கள் உடலில் வழமைக்கு மாறான வித்தியாசத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.