இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது.
நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 வீதமாக பதிவானதுடன், அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.4 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பங்கள், பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையினால் சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் செலவுகளை குறைத்துக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடும்பங்களின் வாழ்வாதார வழிமுறைகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் வறுமை நிலை 25 வீதத்தையும் கடந்துசெல்லும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.
2023 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் வறுமை நிலை மேலும் அதிகரித்துச் செல்லுமெனவும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.