web log free
November 26, 2024

முன்னாள் அமைச்சரின் 18 வயது மகன் கைது

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை மோதிவிட்டு ஓடிய ஜீப் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு காயங்களுக்குள்ளான அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். சந்தேக நபர் 18 வயதுடையவர்.

கடந்த 5ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் அதிவேகமாக சொகுசு ஜீப்பில் வந்த சந்தேக நபர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் எதிர்புறம் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள் மீது மோதியுள்ளார்.

இது அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

வீதியில் நிர்மாணப் பணிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தை தவிர்ப்பதற்காக காரை வலது பக்கமாக திருப்பிய போது வலது பக்கம் இருந்த இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த போது நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் யாரும் இருக்கவில்லை என்றும் பொலீசார் கூறுகின்றனர்.

விபத்துக்குள்ளான ஜீப்பில் அமைச்சரின் மகன் உட்பட 3 பேர் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அமைச்சரின் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd