web log free
May 05, 2024

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிக்கப்பட்டதால் மன்னாரில் குழப்பம்

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நாட்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகள் முன்பாக விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் வேனில் வந்த சிலர் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு உணவு வகைகளை வழங்கி அவர்களை கடத்திச் செல்ல முற்பட்ட போது இரு பிள்ளைகள் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து அலறியடித்துள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மன்னார் பொலிஸாருக்கும் பாடசாலைக்கும் அறிவித்ததையடுத்து மன்னார் மாவட்ட அலுவலகம், பாடசாலை அதிபர்கள், மன்னார் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கலந்துரையாடி விசேட பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இதன்படி, மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாகவும், வீதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர்களை வீதியில் தனியாக நடமாட வேண்டாம், குழுவாக நடமாடுமாறு அறிவித்துள்ளனர்.

மேலும், வீட்டிலிருந்து பாடசாலைக்கு வரும்போது, ​​குழுவோடு வரவோ அல்லது வீட்டில் பெரியவர்களுடன் வரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்டவர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.