கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தொடக்கம் மே மாதம் 9ஆம் திகதி வரை 31,993 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளை தடுக்க பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
“டெங்கு குணமாகி ஓரிரு வாரங்களுக்கு குழந்தைக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டால் அது மூளையை பாதிக்கும். எனவே டெங்குவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். டெங்கு உருவாகினால், அது சிக்கல்களை ஏற்படுத்தும்.
இன்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 டெங்கு நோயாளர்கள் உள்ளனர். எனவே கவனமாக இருங்கள். குறிப்பாக நம் குழந்தைகளை காப்பாற்றுங்கள். அறிகுறிகள் இருந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் குறைபாடு இருந்தால், மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.
குழந்தைக்கு இயற்கையான திரவ உணவைக் கொடுங்கள். பாராசிட்டிமால் அளவுகளில் மட்டும் கொடுங்கள். அதிக அளவு பாராசிட்டிமால் கொடுக்கப்பட்டால், அது குழந்தையின் கல்லீரலை சேதப்படுத்தும்.
அதனடிப்படையில், நாட்டில் டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.