கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் அவரை சதி செய்து, கொலை செய்ய குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சிவலிங்கம் ஆரூரன் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அமைய, பிரதான சாட்சியாக மன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இது வலுக்கட்டாயமாக பெறப்பட்ட வாக்குமூலம் என விசாரணைகளின் போது எதிர்த்தரப்பினரால் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர வேறு எந்த சாட்சியும் இல்லை என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹான் அபேசூரிய நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து, குறித்த நபர் 15 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா மன்றில் ஆஜராகியிருந்தார்.