web log free
May 04, 2024

ஐ.நாவில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது.

கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. 

இலங்கை தொடர்பிலான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை பிரதிநிதிகள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் வினவினோம்.

கூட்டத்தொடரில் ஐ.நாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணதிலக்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

முன்வைக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கைக்கு அமைய, இலங்கை சார்பில் பதிலளிக்கப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார்.