பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் இருந்து 64 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி 10 ஹெரோயின் பொதிகள் நேற்று (22) காலை இலங்கை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலன் ஒன்றின் உறைவிப்பான் பெட்டியில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து வந்த Usa Namakazae கப்பலில் Orishamba 8424604 என்ற எண்ணைக் கொண்ட குளிர்பான கொள்கலனின் உறைவிப்பான் பெட்டியில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 64 கோடியே 77 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 கிலோ 193 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த இறக்குமதியை விடுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை செய்துகொண்டிருந்த வார்ஃப் கிளார்க் மற்றும் இறக்குமதியாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட சுங்க விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.