web log free
May 02, 2024

ஜனாதிபதி நாடு திரும்பியதும் உள்ளூராட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு ஆளும் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்திலும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவிலும் வலுவாக வற்புறுத்தின.

கடந்த வாரம், ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு பிரதமரிடம், விடயத்திற்குப்  பொறுப்பான அமைச்சர் கோரியிருந்தார்.

காலவரையறையின்றி வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டதால் வேட்பு மனுக்களை கையளித்த அரச ஊழியர்களைப் போன்று ஏனைய வேட்பாளர்களும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தின் கீழ், வேட்பாளர் ஒருவர் தனது தொகுதிகளில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களுக்கு உதவுதல் போன்றவற்றின் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறி, இது குறித்து முடிவெடுத்து, அறிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  வேட்புமனுவை இரத்து செய்ய  பிரதமர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதியின் அனுமதி பெற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜனாதிபதியின் வௌிநாட்டு விஜயத்தின் பின்னர் உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட பின்னணியில், அரசியலமைப்பு சபை கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐந்து உறுப்பினர்களை நியமித்துள்ளது.

புதிய ஆணைக்குழுவில் தற்போதுள்ள ஆணைக்குழுவின் உறுப்பினர் எவரும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.