வேகமாக அதிகரித்து வரும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கைகளின் விளைவாக, எம்பிலிபிட்டிய வெலிக்கடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளின் தாக்குதலில் பாதாள உலக தாக்குதலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகள் அதிகரித்துள்ள தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பல பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகத்தை ஒடுக்குவதற்காக தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் விசேட மோட்டார் சைக்கிள் பிரிவுகளும் விசேட அதியுச்சப் பிரிவுகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரிகளான பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்தார்.
ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் அவை முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் எனவும் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த பாதாள உலகக் கும்பல்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கைகள் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்ததோடு, அதன் விளைவாக தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதாள உலக செயற்பாடுகள் வேகமாக வளர்ந்தன.
கடந்த சில மாதங்களில், தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டும் பாதாள உலகத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், சஜீவ மெதவத்த மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.