web log free
November 26, 2024

EPF, ETF பணத்தை யானை விழுங்கிய கதை போல கடன் மறுசீரமைப்பில் EPF, ETF பணம் திருடப்பட்டுள்ளது

நாட்டில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது  மிகவும் வேடிக்கையான விடயம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது திருட்டு சம்பவம் இடம்பெற்ற பின்னர்  அதனை கண்டுபிடிக்க வந்தவர்களையும் திருட்டுக் கும்பலில் சேர்ந்து பங்காளியாகுமாறு அழைப்பதற்கு சமன் என மயில்வாகனம் உதயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

EPF இன் நோக்கமானது, பணியாளரின் ஓய்வூதியக் கட்டத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பணியாளரின் பங்கிற்கு வெகுமதி அளிப்பதும் ஆகும். ஆனால் அரசாங்கத்தின்  கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் காரணமாக கடன் கழிப்பு செய்யப்பட்டு கடன் வழங்கிய நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

அப்படி பார்க்கையில் இங்கையின் மொத்த உள்நாட்டுக் கடன் 12000 பில்லியன்களாகும். இது 74 சதவீதமாகும். இதில் 27 சதவீத கடன் ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.   

எனவே இந்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் நிச்சயமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் வங்கிகளுக்கும் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுசெய்ய வங்கிகள் கடன் வட்டி வீதங்களை அதிகரிக்க நேரிடும். நிலையான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை குறைக்க நேரிடும். இதனால் நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.

குறிப்பாக 25 லட்சம் ஊழியர் சேமலாப நிதி பங்குதாரர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டி விகிதத்தை இழப்பர். அரசாங்கம் அவர்களுக்கு 9 சதவிகித வட்டி வழங்குவதாக உறுதி அளிக்கிறது.  ஆனால் அதனை நம்ப  முடியாது. அப்படியே வழங்க முற்பட்டால் வட்டி விகிதம் குறைந்தது 12 சதவிகிதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத் திருத்தம் உடனடியாக  பாராளுமன்றில் செய்யப்பட வேண்டும்.

அரசாங்கம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு நாட்டின் பண முதலைகளை விட்டுவிட்டு நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ்பட்ட அப்பாவி தொழிலாளர்களின் இறுதி மூச்சாக கருதப்படும் ஊழியர் சேமலாப நிதியில் கை வைத்துள்ளது.

சரியாயின் EPF, ETF பணத்தில் கை வைப்பதற்கு முன்னர் அந்த நிதிக்கு உரிமையாளர்களான தொழிலாளர்களிடம் அரசாங்கம் அனுமதி கோரியிருக்க வேண்டும். ஒருவரின் வைப்பு பணத்தில்  அவரை கேட்காது  அவருக்கு தெரியாது கைவைப்பது ‘திருட்டு செயல்’ அன்றி வேறு என்ன?

எனவேதான் இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தை திருடியுள்ளது என நாம் குற்றச்சாட்டு முன் வைக்கிறோம். 

EPF, ETF பணத்தை  யானை  விழுங்கியது என்ற குற்றச்சாட்டு போலதான் கடன் மறுசீரமைப்பில் EPF, ETF பணம் திருடப்பட்டுள்ள குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

எனவே அன்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று அதனை கை உயர்த்தி  ஆதரித்துள்ளதன் மர்மம் என்ன? திருடப்படும் பணத்தில் பங்கு கிடைப்பதால் கை உயர்த்தி ஆதரவு வழங்கியுள்ளார்கள் என்றே கருத  வேண்டும்.

ஆகவே திருட்டுக் கும்பல்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பாரிய திருட்டை செய்துவிட்டு அதற்கு ஆதரவு வழங்கி எங்களையும் திருட்டுக் கும்பலில் சேருமாறு  அழைப்பது  கேவலமான செயலாகும். இதற்கு ஒருபோதும் நாம் இணங்க மாட்டோம். அதற்கு பதிலாக திருட்டு கும்பலின் சதித் திட்டங்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி அவர்களை விரட்டி அடிக்கவும் சட்டத்தின் முன்  தண்டனை பெற்றுக் கொடுக்கவும் முழு மூச்சுடன் செயற்படுவோம்” என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd