நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 03 மனுக்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி மீளப் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த முறைப்பாடு தொடர்பில் குரல் பரீட்சை நடத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனை அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் நீதிமன்றில் தெரிவித்தார்.
அப்போது, மனுவொன்றை சமர்ப்பித்திருந்த இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இவ்வாறான விசாரணையின்றி இந்த மனுவை பேணுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.
அதன்படி, மனுவை செப்டம்பர் 27-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.