ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடையே ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணை மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு புலனாய்வு நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த 5 அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படுகிறது.
அந்த அமைப்புகள்
ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் முகமதியா (JASM),
ஸ்ரீ லங்கா தௌஹித் ஜமாத் (SLTJ),
அகில இலங்கை தௌஹீத் ஜமாத் (ACTJ),
சிலோன் தௌஹித் ஜமாத்
ஐக்கிய தௌஹீத் ஜமாத் (UTJ)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த ஐந்து அமைப்புகளையும் மற்ற ஆறு அமைப்புகளையும் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை 2021 ஏப்ரல் மாதம் வெளியிட்டார்.
புலனாய்வு அமைப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்பதாக அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், தடை நீக்கப்பட்ட பிறகும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் நிதி மற்றும் கல்வித் திட்டங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மீண்டும் தடையை அமுல்படுத்த வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.