கொழும்பு ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக கட்டிடங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகருக்கு மாற்றுவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்கு மேலதிகமாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, அமைச்சரவை செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய அலுவலகங்களும் கோட்டேக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பாதுகாப்பு அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க புராதன கட்டிடங்களை சுற்றுலா தலங்களாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.