web log free
October 18, 2024

மலையக மக்கள் தொடர்பில் சபையில் முழுநாள் விவாதம்

பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது 27/2 இன்கீழ் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினை, கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், பெருந்தோட்டப்பகுதிகளில் மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ள விவகாரம் உள்ளிட்டவை தொடர்பில் அவர் முக்கிய பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

நிதி அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் மேற்படி கேள்விகள் தொடர்புபடுவதால் கல்வி அமைச்சு சார்ந்த விடயங்களுக்கு பதிலளிப்பதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு பிரதொரு நாளில் துறைசார் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் எனவும் சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

அவ்வேளையில் தோட்ட பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றிருந்தாலும், தோட்ட பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இன்னும் சட்டப்பூர்வமாக வழங்கப்படவில்லை என வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார். அத்துடன், மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படாமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், 

" தோட்டப்பகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் கதைப்பதற்கு ஒருநாள் தனியான விவாதம் அவசியம். தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இன்று பதில் வழங்காவிட்டாலும், ஒரு நாள் விவாதத்தை தாருங்கள்." - என்றார்.

இதற்கு பதிலளித்த பெருத்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, விவாதத்துக்குரிய சந்தர்ப்பத்தை வழங்க தயார் எனக் குறிப்பிட்டார்.

திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது தொடர்பான தீர்மானம் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படும்.