சமனல வாவியிலிருந்து உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீரை திறந்துவிடும் நடவடிக்கை இன்று(08) அதிகாலை 2.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
120 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், செக்கனுக்கு 42 கன மீட்டர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்று(08) காலை வரையான நிலவரத்தின் படி சமனல வாவியின் மொத்த நீர்மட்டம் 13 வீதமாக பதிவாகியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மிகக் குறைந்தளவான நீர் காணப்படுவதனால் நேற்று(07) வரை சமனல வாவியிலிருந்து மிகக் குறைந்த அளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
எனினும், பயிர்ச்செய்கைக்கு அதிகளவான நீரை விநியோகிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று(08) முதல் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்படவுள்ளது.
நீரை வெறுமனே திறந்து விடுவதால் எந்த பயனும் இல்லை என்பதை கருத்திற்கொண்டே, மின்சாரத்தை உற்பத்தி செய்தவாறு தண்ணீர் திறந்து விடப்படுமமென பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதனிடையே, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக அவசர மின் கொள்வனவை மேற்கொள்ள நேரிடுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில், மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து எதிர்காலத்தில் மின்சாரம் கொள்வனவு செய்யப்படலாமென அவர் குறிப்பிட்டார்.
100 மெகாவாட் மின்சாரம் அவசரமாக கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.