கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுறுப்பிட்டியில் அமைந்துள்ள துப்புரவு முகவர் உற்பத்தி நிலையத்தில் இன்று (08) காலை ஏற்பட்ட தீ விபத்தினால் அருகிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த 85 மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
19 ஊழியர்கள் பணிபுரியும் குளோபல் கேர் என்ற தொழிற்சாலையில் பாரிய புகை சூழ்ந்ததால், தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள புனித செபஸ்தியன்ஸ் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் தீ பரவியதும் வெலிசர கடற்படையின் தீயணைப்புப் பிரிவு, நீர்கொழும்பு மற்றும் கம்பஹா மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவுகள் இணைந்து தீயை அணைத்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.