web log free
September 08, 2024

இன முறுகலை தடுக்கவென தான் எடுத்த முடிவை தேரர்களுக்கு நேரில் தெளிவுபடுத்திய ஆளுநர் செந்தில்

திருகோணமலை நிலாவெளி இழுப்பைக்குளம் பௌத்த விகாரை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில் விகாரை நிர்மாணத்துடன் சம்பந்தப்பட்ட தேரர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உரிய விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலாவெளி இழுப்பைப்குளம் பகுதியில் புதிதாக பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இழுப்பைக்குளம் பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இதனால் குறித்த பகுதியில் இன முறுகல் நிலை ஒன்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்பட்டது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து உண்மையான கள நிலவரங்களை ஆய்வு செய்த ஆளுநர் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு, அமைதி, பாதுகாப்பு மற்றும் இன ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் முடிவெடுத்து புதிய விகாரை நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அப்பிரதேச பௌத்த பிக்குகள் சிலர் விகாரை அமைக்க வசதியளிக்குமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பல அரசியல்வாதிகள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் ஆளுநர் சமூக அக்கறை கருதி தனது முடிவை மாற்றாது உறுதியாக இருக்கிறார்.

எனினும் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிக்குகளுக்கும் பௌத்த மக்களுக்கும் உரிய விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்த ஆளுநர் செந்தில் தொண்டமான், பலாங்கொட மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான அம்பருக்காஹரம விகாரையின் கிளை விகாரையாக நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள விகாராபதிகளை சந்தித்து விளக்கமளித்தார்.

பலாங்கொட மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் விகாரபதி அமரபுற மஹா நிக்காய சங்கநாயக்க கரவிட்ட உயாங்கொட மைத்திரிமூர்த்தி மஹாநாயக்க தேரர், அம்பருக்காஹரம விகாரை அமரபுற சமாகமே மூலஸ்தானய, அமரபுற மூலவன்சிக பாரஷவிய மூலஸ்தானய வெளித்தர பலப்பிட்டிய விகாரையின் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரர் ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்து விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தெளிவுப்படுத்தினார்.

நிலாவெளி இலுப்பைப்குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் போது அங்கு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படும் எனவும் ஆளுநர் என்ற வகையில் இன முறுகல் ஏற்படுவதை தடுக்கும் தன்னுடைய கடமையை செய்துள்ளதாகவும் ஆளுநர் விளக்கம் அளித்தார்.
ஆளுநர் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இனங்களின் உரிமைகளை சமமாக பாதுகாக்க வேண்டியது எனது கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்கள், வட இந்தியர்கள், தென் கொரியா, தாய்லாந்து, பூட்டான், ஜப்பான், சீனா, நேபால், தாய்வான், இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் புத்த பெருமானை வழிபடுகின்றனர். அவருடைய போதனைகளை முழுமையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

இவ்வாறான சூழ்நிலையில் விகாரை அமைக்க கூடாது என எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கும் போது அரசாங்கம் என்ற வகையில் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி சுமூகமான தீர்வு பெற்று தருவதன் மூலம் இனங்களுக்கு கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.