web log free
November 26, 2024

மொட்டுக் கட்சிக்கு சவால் விடுத்துள்ள நிமல் லன்சா

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரட்டைக் கொள்கையை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

நிமல் லான்சா ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தார்மீக உரிமை இல்லை.  

13ற்கு அப்பால் அதிகாரப் பிரிவினைக்கான தீர்வை எட்டுவதற்கு உரிமை இல்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் இன்னமும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது, அதன் கீழ் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை அமுல்படுத்தப் போகிறார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசமும் அதற்கு எதிராக தமது கருத்தை வெளியிட்டு, நாட்டின் முன் தமது "இரட்டைப் போக்கை" வெளிப்படுத்தினர்.

நிலையான பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப நாட்டு மக்கள் அனைவருக்கும் இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்த அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அப்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இலங்கை உணர்வு கட்டியெழுப்பப்படும். சகல தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு மூலம் சர்வதேச நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்துக்கும், செயற்படும் பெரும்பான்மையான எம்.பி.க்களின் கருத்துக்கும் மாறுபட்ட கருத்தை கட்சியின் செயலாளர் எந்த அடிப்படையில் முன்வைப்பார் என்பது விளக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்தால் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு நேரடியாக வெளிப்படுத்துமாறும் நிமல் லன்சா குறிப்பிட்டுள்ளார்.   

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd