பாதாள உலகக் குழுவின் பலம் வாய்ந்த தலைவனாகக் கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் கோட்டா அசங்க ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவி வருவதாக இந்நாட்டின் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுக்கள் இருவரையும் கைது செய்ய தேடும் போது, அவர்கள் 2018 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வு அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கணேமுல்ல சஞ்சீவ தனது சீடன் கோட்டா அசங்கவுடன் இணைந்து இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகளை மேற்கொள்வதற்கு அவர்களின் ஆதரவாளர்களை வழிநடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பாதுகாப்புப் படையினர் இருவரையும் கைது செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் குறிப்பிட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இருவரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தனித்தனியான விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருவதை பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.