web log free
May 06, 2025

அதிசயம் ஆனால் உண்மை! திருமலையில் 10 பேர் வழிபட தலா ஒரு விகாரை

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் வெறும் 238  சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 10 சிங்களர்களின் வழிபாட்டிற்கு தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தை சிங்களமயமாக்கும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு பௌத்த விகாரைகள் அமைத்து பயன்படுத்தும் சூழ்ச்சித் திட்டமே இங்கு அரங்கேற்றப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள்  ஆயிரக்கணக்கில் செறிந்து வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளே இல்லாத சூழ்நிலையில், நாட்டில் பல பகுதிகளில் புராதன பௌத்த விகாரைகள் சேதமடைந்து திருத்தப்படாமல் கைவிடப்பட்ட சூழ்நிலையில் சிங்கள மக்கள் மிகவும் குறைந்தளவில் வாழும் பகுதிகளில் புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் பின்னணியை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

குச்சவெளி பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்த புதிய விகாரைகளுக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் இன ஆக்கிரமிப்பு செய்யும் முகமாகவும் அமைந்துள்ளமை தெளிவாகிறது.

மற்றுமொரு வகையில் புனிதமான பெளத்த மதத்திற்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கீழே தரப்பட்டுள்ள புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 10 கிராம சேவகர் பிரிவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் 09 பௌத்த விகாரைகளும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 14 பௌத்த விகாரைகளும் புதிதாக அமைக்கப்படுகின்றன.

எந்தவொரு கிராம சேவகர் பிரிவிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இடம்பெறும் இன ஆக்கிரமிப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதன் பின்னணியில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அல்லது அதிகாரப் பகிர்வை தமிழ் பேசும் மக்கள் அடைய முடியுமா என்பது கேள்விக்குறியே!  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd